தாழங்குடா முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி தொடக்கம்
கடலூர் தாழங்குடா முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி தொடங்கியது.
கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி எனும் பேரலை தாக்கிய பிறகு, கடலூர் மாவட்ட கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நீரோட்டத்தில் மாற்றம், கடல் சீற்றம், மண் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் வரும் நிலை போன்றவை நிகழ்ந்து வருகிறது.
இதையடுத்து கடற்கரையோரம் மண் அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் கொட்டி, மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரையோரம் கருங்கல் கொட்டும் பணி நடந்தது. பின்னர் அந்த திட்டம் திடீரென கைவிடப்பட்டது. பிறகு மீண்டும் இந்த திட்டம் மீன்வளத்துறை சார்பில் தொடங்கியது.
ரூ.13 கோடி
அதன்படி தாழங்குடா கடற்கரையில் மண் அரிப்பை தடுக்க 7 இடங்களில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டப் பட்டது. இந்த திட்டத்தின்படி கடற்கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர், 50 மீட்டர், 20 மீட்டர் தூரம் வரை கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இது தவிர மீன் விற்பனைக்கூடம், மீன் உலர் தளம், மீன் இறங்கு தளம், சாலை வசதி அமைக்கவும் சேர்த்து ரூ.13 கோடியே 6 லட்சம் செலவில் திட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையில் தாழங்குடா பகுதி மீனவர்கள் தென்பெண்ணையாற்றின் கடல் முகத்துவாரம் மணலால் மூடப்பட்டு உள்ளதால், படகுகளில் சென்று மீன்பிடித்து விட்டு வர முடியவில்லை. படகுகளையும் நிறுத்த முடியவில்லை. மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதிலும் சிரமம் உள்ளது. ஆகவே தங்களுக்கு முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, முகத்துவாரத்தை ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மிதவை எந்திரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரம் தாழங்குடா கடற்கரையோர பகுதியில் நிறுத்தப்பட்டது. தற்போது முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. முகத்துவாரம் பகுதியில் இருந்து சிறிது தூரம் மணலை அள்ளி ஆழப்படுத்தும் பணியில் தனியார் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பணிகள் முடிந்தால், மீனவர்கள் எளிதில் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வர முடியும். படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியும். மழைக்காலங்களிலும் தென்பெண்ணையாற்றில் இருந்து எளிதில் கடலுக்குள் தண்ணீர் செல்லும் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.