"திரும்ப நம் ஊருக்கே வாங்க சார்.." பல் பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி-க்கு மற்றொரு தரப்பினர் ஆதரவு..!
பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அம்பை ஏ.எஸ்.பி.க்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமதுசபீர் ஆலமை நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அம்பை ஏ.எஸ்.பி.க்கு அம்பை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, அம்பை ஏஸ்பியாக பல்வீர் சிங் பொறுப்பேற்றதில் இருந்து எங்கள் பகுதிகளில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன. குறிப்பாக கடந்த ஆறு மாதகாலத்தில் அம்பை சுற்றுப்புற பகுதிகளில் கொலை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.
இளைஞர்களிடையே கஞ்சா பழக்கம் இல்லை என்றும், சிறிய பிரச்சினைகளில் இளைஞர்கள், மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைப்பார் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே அம்பை பாப்பாக்குடி அருகே உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் பல்வீர் சிங்கிற்கு ஆதரவாக பேனர் ஒன்றை அடித்துள்ளனர். அதில், தமிழக முதல்வருக்கு அன்பான வேண்டுகோள், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் இளைஞர்கள் சிலர் பூஜைகள் செய்தனர். அவர் தொடர்ந்து பணியில் அமர, அம்மன் பாதத்தில் ஏஸ்பி-யின் புகைப்படத்தை வைத்து எடுத்தனர். ஏஎஸ்பி-க்கு ஆதரவாக சில வீடியோக்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகின்றன.