மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார். பெண் போலீஸ் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக பலியானார். பெண் போலீஸ் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

பெண் போலீஸ்

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு அஜிதா(வயது 29) மற்றும் ஒரு மகளும், அஜின்(27) என்ற மகனும் உண்டு.

இதில் அஜிதா நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். அஜின் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் அஜின் தனது மோட்டார் சைக்கிளில் அக்காள் அஜிதாவை அழைத்துக்கொண்டு தேங்காப்பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி மருந்து வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். முன்சிறை பகுதியில் சென்றபோது, எதிரே கோவிலுக்கு சென்ற அவர்களது தாயார் ராஜகுமாரி வந்து கொண்டிருந்தார்.

அதை கண்ட அஜின் மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்தி தாயாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மற்றோரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.

வாலிபர் பலி

இந்த விபத்தில் அஜின், அஜிதா, அவர்களது தாயார் ராஜகுமாரி மற்றும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த முன்சிறை பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் தினேஷ்(19), ஒச்சவிளையை சேர்ந்த மோசஸ் மகன் எபின்(19) ஆகிய 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அஜின், அஜிதாவை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ராஜகுமாரியையும், தினேஷ், எபின் ஆகிய 3 பேரை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்ைச பெற்று வந்த அஜின் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். அஜிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story