மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் அருகே ஆக்கூர் முக்கூட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் நிலை தடுமாரி கீழே விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பறிதாபமாக இறந்தார்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர் அருகே ஆக்கூர் முக்கூட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் நிலை தடுமாரி கீழே விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பறிதாபமாக இறந்தார்.

வாலிபர் சாவு

திருக்கடையூர் அருகே ஆக்கூர் சிறப்புலிநாயனார் வீதியை சேர்ந்த ராமன் மகன் ராஜா (வயது 27). நேற்று முன்தினம் இரவு ராஜா, தனது மோட்டார் சைக்கிளில் ஆக்கூர் முக்கூட்டில் உள்ள ஒரு கடைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது எதிரே வந்த மருதம்பள்ளம், சிதம்பரம்பாக்கம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த சம்பத் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ராஜா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி ராஜா ஆக்கூர் முக்கூட்டு மெயின்ரோட்டில் விழுந்தார்.

அப்போது அந்த வழியாக திருக்கடையூரிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் ராஜாவின் மீது ஏறியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பத், அரசு பஸ் டிரைவர் நடராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபர் இறந்துபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே அப்பகுதி பொது மக்கள், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஆக்கூர் முக்கூட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story