கல்லூரி மாணவர் தற்கொலை
திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் ராஜ்கண்ணா நகரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் இசக்கியப்பன். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் பரமசிவம் (22). இவர் தூத்துக்குடியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
பரமசிவம் நேற்று காலையில் தனது தாயார் சுப்புலட்சுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வேலைக்கு கொண்டு விட்டு விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். தகவல் அறிந்து வந்த கணேசன், தன்னுடைய மகன் பரமசிவத்தை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து கணேசன் கொடுத்த புகாரின்பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.