மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி
மானூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலியானார்.
மானூர்:
மானூர் அருகே எட்டான்குளத்தைச் சேர்ந்தவர் பாலன் (வயது 50). டிரைவர். இவருடைய மகள் மகாலட்சுமி (19). இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் எட்டான்குளத்தில் இருந்து மதவக்குறிச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மானூர் அருகே மங்கம்மாள் நகர் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய மகாலட்சுமியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மானூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு மகாலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.