கடலூரில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி மாணவிகள் உள்பட 8 பேர் காயம்
கடலூரில் ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலியானார். மாணவிகள் உள்பட 8 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் காலை நேர வகுப்புகள் மதியம் முடிந்ததும் மாணவ-மாணவிகள் போதிய பஸ் வசதி இல்லாமல், ஆட்டோக்களில் ஏறி பஸ் நிலையம் வருகிறார்கள். இதனால் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. அந்த வகையில் நேற்று மதியம் காலை நேர வகுப்புகள் முடிந்ததும் 2 மாணவர்கள், 6 மாணவிகள் என 8 பேர் ஒரு ஆட்டோவில் ஏறி பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை தேவனாம்பட்டினம் பாஞ்சாலபுரத்தை சேர்ந்த பாபு மகன் லோகநாதன் (வயது 30) என்பவர் ஓட்டினார். அந்த ஆட்டோ சில்வர் பீச் ரோட்டில் உள்ள உப்பனாறு பாலத்தை தாண்டி, தனியார் ஓட்டல் அருகே வந்த போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே புகுந்தது.
மாணவர் பலி
இதில் அந்த நாய் மீது மோதாமல் இருக்க லோகநாதன் ஆட்டோவை திருப்பினார். இருப்பினும் ஆட்டோ அந்த நாய் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் லோகநாதன், 3-ம் ஆண்டு நுண்ணுயிரியல் துறை மாணவர் பண்ருட்டி மணப்பாக்கத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19), மாணவிகள் சந்தியா (18), ரேவதி (18), புவனேஸ்வரி (18), கீர்த்திகா (21), லாவண்யா (22), காவியா (18), மாணவன் அருண் (19) ஆகிய 9 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த 9 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
8 பேருக்கு சிகிச்சை
மேலும் படுகாயமடைந்த ரேவதி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மற்ற 7 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையில் விபத்தில் சிக்கிய நாய் சம்பவ இடத்திலேயே செத்தது.
இந்த விபத்து சம்பவம் பற்றி அறிந்ததும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு கூடினர். கல்லூரி முதல்வர் சாந்தியும் நேரில் வந்து இறந்த மாணவன் உடலை பார்த்து கதறி அழுதார். சக மாணவர்களும் தேம்பி, தேம்பி அழுதனர். இது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சோகம்
தொடர்ந்து விபத்து குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் மாணவர் இறந்த சம்பவம், அவரது பெற்றோர், உறவினர்களை மட்டுமின்றி சக மாணவர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.