தீக்குளித்த காதலியை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு: மயிலாடுதுறையில் பரபரப்பு


தீக்குளித்த காதலியை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு: மயிலாடுதுறையில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 May 2024 5:37 AM IST (Updated: 15 May 2024 11:35 AM IST)
t-max-icont-min-icon

காதலி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). இவர், பூம்புகார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் என்பவர் மகள் சிந்துஜா(22). இவர், மயிலாடுதுறை அரசு ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ,இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. காதலர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இதற்கிடையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் சிந்துஜாவிடம் பேசுவது மற்றும் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இது தெரிந்ததும் சிந்துஜா மிகுந்த மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று பூம்புகாரில் காதலர்கள் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருவரும் மயிலாடுதுறை வந்தனர்.

மயிலாடுதுறை காவிரி பாலக்கரை என்ற இடத்தில் வந்தபோது சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அதைப்பார்த்து பதறிப்போன ஆகாஷ், சிந்துஜாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்தது. பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆகாஷ், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், சிந்துஜா தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சிந்துஜாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆகாஷ் தனது மரண வாக்குமூலத்தில் கொடுத்த தகவலின்படி மயிலாடுதுறை போலீசார், சிந்துஜா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story