கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை
பூதப்பாண்டி அருகே நீண்ட நேரம் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே நீண்ட நேரம் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
பூதப்பாண்டி அருகே உள்ள மேலஈசாந்தி மங்கலம் வடக்குத் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் காந்தி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் நிலா (வயது 18) ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் ஹேமா நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.
நிலா நீண்ட நேரம் செல்போனை பார்க்கும் பழக்கம் உடையவராம். இதனை தாயார் செல்வி அடிக்கடி கண்டித்துள்ளார். இது மாணவி நிலாவை மனதளவில் பாதித்துள்ளது.
தாயார் கண்டித்தார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெகுநேரமாகியும் செல்போனை நிலா பார்த்துக் கொண்டுள்ளார். இதனை கவனித்த தாயார் செல்வி, இன்னும் தூங்காமல் செல்போனையே பார், உனக்கு வேற வேலையே இல்லையா?, சொன்னதை கேட்க மாட்டாயா? என திட்டியதாக தெரிகிறது. உடனே நிலா செல்போனை அணைத்து விட்டு தூங்க முயன்றார்.
ஆனால் அவரால் தூங்க முடியவில்லை. சுதந்திரமாக செல்போன் கூட பார்க்க முடியலையே என மாணவி நிலா மனதுக்குள் அழுது புலம்பினார்.
தீக்குளித்து தற்கொலை
ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலைக்கு சென்ற அவர் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்தார்.
உடனே வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றார். அங்கு மண்எண்ணெயை தன்னுடைய உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டார். இதனால் தீ குபீரென பிடித்து உடல் முழுவதும் பற்றி எரிந்தது. உடலில் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்காமல் அவர் அங்குமிங்கும் ஓடியபடி அலறி துடித்தார்.
உடனே சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் நிலா உடல் கருகி அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீண்ட நேரம் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.