5 இடங்களில் கல்லூரி சந்தை
5 இடங்களில் கல்லூரி சந்தை
தஞ்சை மாவட்டத்தில் மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய 5 இடங்களில் கல்லூரி சந்தைகள் நடத்தப்படுகிறது என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறினார்.
கல்லூரி சந்தை
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட கல்லூரி சந்தையினை கலெக்டர் தீபக்ஜேக்கப் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதிலுமுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களின் மேம்பாட்டிற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதிலும் கல்லூரி சந்தைகள் நடத்திடவும், தஞ்சை மாவட்டத்திற்கு5 கல்லூரி சந்தைகள் நடத்திடவும் இந்த நிதி ஆண்டிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிர் குழுக்கள் உற்பத்தி பொருட்கள்
அதனடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் முதலாவது கல்லூரி சந்தை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்வதுடன் வருங்கால நுகர்வோராக இருக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்பார்ப்புகளை அறிந்து பொருட்களில் தேவையான மாற்றங்களை செய்து விற்பனை அதிகரிக்கவும், நல்வாய்ப்பாக அமையும்.
மேலும், மாணவ, மாணவிகள் இக்கல்லூரி சந்தைகளின் வாயிலாக மகளிர் குழு செயல்பாடுகளை தெரிந்து கொள்வதுடன் தங்களது எதிர்கால தேவைக்கு இப்பொருட்களை பயன்படுத்துவதற்கும் அடித்தளமாக அமையும். இக்கல்லூரி சந்தையில் தஞ்சையை சேந்த தலையாட்டி பொம்மைகள், சணல் பைகள், அலங்கார நகைகள், சிறுதானிய உணவு பொருட்கள், துணிவகைகள், தின்பண்டங்கள் மற்றும் திருச்சி, நாமக்கல், விருதுநகர் போன்ற பிற மாவட்ட மகளிர் உதவிக்குழுவினரின் சுய பொருட்களும் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார், உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், கல்லூரி முதல்வர் ஜான்பீட்டர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை வணிகவியல்துறை தலைவர் முத்தமிழ்திருமகள் ஒருங்கிணைத்தார்.