கல்லூரி மாணவி கொலையான விவகாரம் எதிரொலி: பரங்கிமலை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு


கல்லூரி மாணவி கொலையான விவகாரம் எதிரொலி: பரங்கிமலை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
x

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட விவகார பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 13-ந் தேதியன்று மதியம் காதல் விவகாரத்தில் சத்தியபிரியா என்ற கல்லூரி மாணவியை காதலன் சதீஷ் என்பவர் ரெயில் முன் தள்ளி கொலை செய்த பயங்கர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டும், சென்னையில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை ரெயில்களில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்வது, பயணிகளை அச்சுறுத்தும் விதமாக பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை தரைகளில் உரசி கொண்டு செல்வது, தீபாவளியையொட்டி பட்டாசுகளை பயணிகள் ரெயில்களில் எடுத்து செல்வதை தடுப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை முதன்மை கமிஷனர் செந்தில் குமரேசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து பரங்கிமலை நிலைய ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ரங்கிமலை நிலையத்தில் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது, நடைமேடையில் கால்களை உரசிச்செல்வது, ரெயில் கூரைமீது பயணம் செய்வது, கல்லூரி மாணவர்களுக்குள் ரெயில் நிலையத்தில் மோதல் ஏற்படுவதை தடுப்பது போன்ற பணிகளை கண்காணித்து வருகிறது.

இதையடுத்து, நேற்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தீவி்ரமாக கண்காணித்த நிலையில், படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த கல்லூரி மாணவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து ரெயிலில் இருந்து இறக்கினர்.

பின்னர், அவர்களிடம் ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது சட்டப்படி குற்றம். ரெயிலில் ஏறியதும் உள்ளே சென்று விட வேண்டும். . ரெயில் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த வகையில் பரங்கிமலை நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் மீது இதுவரை 301 வழக்குகள் பதிவு செய்து ரூ.1 லட்சம் அபராதம் வசூலித்தும், ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்யும் மற்றும் நடைமேடையில் கால்களை உரசிப்பயணம்செய்யும் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Next Story