செவிந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டிக்கு காலை, மாலை வேளைகளில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் மாணவர்களுடன் பெற்றோர் மனு
செவிந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டி கிராமத்திற்கு காலை, மாலை வேளைகளில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்களுடன் வந்து பெற்றோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
செவிந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டி கிராமத்திற்கு காலை, மாலை வேளைகளில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்களுடன் வந்து பெற்றோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
நாமக்கல் மாவட்டம் செவிந்திப்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பள்ளி குழந்தைகளுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
எருமப்பட்டி ஒன்றியம் செவிந்திப்பட்டி கிராமத்திற்கு நாமக்கல்லில் இருந்து 2 பஸ்கள் வந்து செல்கின்றன. செவிந்திப்பட்டி கிராம ஊராட்சியில் அமைந்துள்ள ஊர்களான மலைப்பட்டி, பெரியசிந்தம்பட்டி ஆகிய ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செவிந்திப்பட்டி கோட்டைமேடு பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்
சரியான பஸ் வசதி இல்லாததால் இவர்கள் சைக்கிளிலும், நடந்து சென்றும் படிக்கும் சூழ்நிலை உள்ளது. இதேபோல் மலைப்பட்டி, பெரிய சிந்தம்பட்டி கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் வகுப்பு படிக்க 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள செவிந்திப்பட்டி மேல்நிலைப்பள்ளிக்கு சைக்கிளிலும், நடந்தும் செல்கின்றனர். இதனால் பள்ளி முடிந்து குழந்தைகள் வருவதற்கு வெகுநேரம் ஆகிறது. மழை காலங்களில் பல்வேறு துன்பங்களை மாணவர்கள் அனுபவிக்கிறார்கள்.
கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசு மலையடிவார தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் சுமார் 50 மாணவர்களுக்கு பஸ்வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது காலையில் 6.45 மணிக்கு ஒரே பஸ் மட்டும் எங்கள் கிராமத்திற்கு வருகிறது. அதனால் மாணவர்களுக்கு எவ்வித பயனும் இல்லை. எனவே காலை 9 மணிக்கும் மாலை 4.15 மணிக்கும் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தால், அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்பெறுவார்கள். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இக்கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
கூட்டுறவு வங்கி மாற்றம்
இதேபோல் தோட்டமுடையாம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
எருமப்பட்டி ஒன்றியத்தில் வரகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆரம்பித்தது முதல் நாங்கள் வரவு, செலவு அனைத்தையும் செய்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை சார்பதிவாளர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வரவு, செலவு செய்து வரும் வரகூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை அனைத்து கணக்கு வழக்குகளையும் முடித்து கொண்டு, தோட்டமுடையாம்பட்டி வங்கியில் உறுப்பினராக சேர்ந்து இருப்பு தொகையை கட்டி கடன் பெற்று கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
வரகூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 50 ஆண்டுகளாக உறுப்பினராக செயல்பட்டு வரும் எங்களை தோட்டமுடையாம்பட்டி வேளாண் வங்கிக்கு மாற்றி உறுப்பினராக சேருங்கள் என்று சொல்வது நியாயம் இல்லை.எனவே ஏற்கனவே செயல்பட்டு கொண்டு இருக்கும், நடைமுறைபடி வரகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் எவ்வித மாற்றமும் செய்யாமல், தொடர்ந்து செயல்படவும், விவசாயிகள் கடன், சேமிப்பு உள்பட அனைத்து விதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.