வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு
x

ராசிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் உமா நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளாநல்லூர் பேரூராட்சி குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை, பயன்பெறும் பொதுமக்கள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் பிள்ளா நல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி, பொறியாளர் பழனி, உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் ஆய்வு

மேலும் ராசிபுரம் ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் முத்துக்காளிப்பட்டி சாலை முதல் கோரக்காடு வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை, பி.எம்.பாளையம் ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வடுகம் முனியப்பம்பாளையம், சீராப்பள்ளி, சின்னகாக்காவேரி ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன் முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ராசிபுரம் தாசில்தார் சுரேஷ், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரி மேகலா, உதவி பொறியாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story