பள்ளி, கல்லூரி, மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
குடியாத்தம் பகுதியில் பள்ளி, கல்லூரி, அரசு மருத்துவமனையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம்
குடியாத்தம் பகுதியில் பள்ளி, கல்லூரி, அரசு மருத்துவமனையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் பெ.குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரிக்கு சென்ற அவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை பெற உள்ள மாணவிகளின் விவரங்களை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக களைய முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார்.
பதிவேடுகள்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராவரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று பதிவேடுகளை ஆய்வு செய்தார். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணி விவரங்களின் பணி பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அக்ராவரம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களிடம் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அக்ராவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதார மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் அமர்வதற்கு 20 இருக்கைகளை உடனடியாக அமைக்க உத்தரவிட்டார்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ராஜீவ்காந்தி நகர் பாசன கால்வாயில் நீர் செரிவூட்டும் குழிகள் அமைக்கும் பணியினை அவர் பார்வையிட்டார்.
இடைநின்ற மாணவன்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அக்ராவரம் ஊராட்சியில் வழியில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுவனை அழைத்து பள்ளிக்கு செல்லவில்லையா என கேட்டார்.
அப்போது அந்த மாணவன் பள்ளி படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டதாக கூறினான். இதையடுத்து மாணவன் படித்த அக்ராவரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவனை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் மாணவனின் பள்ளி படிப்பு தொடர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் தன்னுடைய உதவியாளரிடம் அந்த மாணவருக்கு தேவையான உடை, காலணி மற்றும் புத்தகம் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டார்.
அங்கு சமையலறையுடன் கூடிய இருப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு சமைக்கப்படும் மதிய உணவின் தரம் எவ்வாறு உள்ளது என சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.
பின்னர் பள்ளியின் வகுப்பறைக்கு சென்று ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் குறித்து கேட்டறிந்தார். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனை
இதையடுத்து குடியாத்தம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 ஆகிய பகுதிகளில் இருந்த பொதுமக்களிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய கட்டிடம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுகளின்போது உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், அரசினர் திருமகள்ஆலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், முன்னோடி வங்கி மேலாளர் மொய்தீன், உதவி திட்ட அலுவலர் டி.வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, குடியாத்தம் அரசு மருத்துவமனை அலுவலர் மாறன்பாபு, பள்ளி தலைமை ஆசிரியை அம்பிகா ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, ஒன்றிய பொறியாளர்கள் புவியரசன், குகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.