அணைகள், நீர்நிலைகளை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர்


அணைகள், நீர்நிலைகளை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அணைகள் நீர்நிலைகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட அணைகள் மற்றும் நீர்வளத்துறை சார்பில் நீர்நிலைகளில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

நீர்நிலைகள் ஆய்வு

குமரி மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் தூர்வாரும் பணி ஆகியவற்றை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- பேயன்குழி இரட்டைக்கரை கால்வாயில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு பிறகு சீரமைக்கப்பட்டு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாசனத்திற்காக மாதிரி வெள்ளோட்டம் விடப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இறுதி பணி மேற்கொள்வது மற்றும் உறுதி தன்மையும், நிரந்தர வெள்ள சேத நிவாரண பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நபார்டு திட்டத்தின் கீழ் இரணியல் தலக்குளம் முதல் மணவாளக்குறிச்சி பெரியகுளம் வரை ரூ.75 லட்சம் மதிப்பில் 6 மீட்டராக இருந்த பாலத்தை 14 மீட்டராக அகலப்படுத்தி, கைப்பிடி வடிவிலான ஷட்டர்களை கை சுற்றும் வடிவிலான ஷட்டர்களாக மாற்றப்பட்டதும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இரணியல் பிரிவு கால்வாய் - ெரயில்வே இரட்டை பாதை பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டதோடு, நிரந்தர வெள்ள சேத நிவாரண பணிகள் திட்டத்தின்கீழ் ரூ.1.4 கோடி மதிப்பில் சாமியார்மடம் முதல் சவரிச்சான்விளை வரை உள்ள பட்டணம் கால்வாயின் மெயின் கால்வாயை 98 மீட்டர் நீளத்திற்கு தரையில் இருந்து 3 மீட்டர் உயர்த்துவதற்கான புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

சாகச சுற்றுலாத்தலம்

பின்னர் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து வரும் தண்ணீர் புத்தன் அணையில் சேகரிக்கப்பட்டு, அந்த நீரை புத்தனார் கால்வாய் மற்றும் பாண்டியன் கால்வாய் என பிரித்து விவசாயிகளுக்கு முறைப்படுத்தி நீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டதோடு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் நீர் இருப்பு மற்றும் கொள்ளளவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது.

சிற்றார் -2 அணையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை கழகம் சார்பில் ரூ.4.30 கோடி மதிப்பில் படகு தளம் மற்றும் சாகச சுற்றுலா தளம் அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயில் அடையாமடை முதல் குமாரபுரம், சரல்விளை, மருந்துகோட்டை, ஆனைக்கிடங்கு, தோட்டியோடு வரை தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் பாசிகளை அகற்றி தூர்வாரும் பணியை துரிதமாக மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கலெக்டர், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக் முன்னிலையில் திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட மணியன்குழி பகுதியில் ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டும் பணியை நேரில் பார்வையிட்டார்.

ஆய்வுகளின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ராஜா, உதவி செயற்பொறியாளர்கள் வின்ஸ்டன் லாரன்ஸ் (பேச்சிப்பாறை), சுகந்தா (குழித்துறை), மில்கி (செருப்பாலூர்), உதவி பொறியாளர்கள் கதிரவன், வைஷ்ணவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story