கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தேசியகொடி ஏற்றினார்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தேசியகொடி ஏற்றினார்
கள்ளக்குறிச்சி
குடியரசு தினவிழா
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியகொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல் துறை அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதானத்தை பறைசாற்றும் விதமாக வெண்புறாக்களையும், மூவர்ண நிறத்திறனாலான பலூன்களையும் பறக்கவிட்டார்.
29 போலீஸ்காரர்களுக்கு பதக்கம்
இதையடுத்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 29 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்கள், மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை, காவல்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தீயணைப்பு மீட்புத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 191 அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
கலைநிகழ்ச்சிகள்
தொடர்ந்து குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற்ற போலீசாருக்கு கேடயங்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜய்கார்த்திக்ராஜ், மாவட்ட திட்ட இயக்குனர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) சுந்தர்ராஜன், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் உஷா, நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.