கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நெடுஞ்சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் பவித்ரா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கொய்யா, எலுமிச்சை உள்ளிட்ட பழக்கன்றுகள் மற்றும் விதை தொகுப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட நெடுஞ்சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்குட்பட்ட திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்களில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகளில் பல்வேறு வகையை சேர்ந்த தலா 3,000 மரக்கன்றுகள் வீதம் நடும்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நடப்படும் மரக்கன்றுகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் தனபால் மற்றும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.