கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க கூடாது - நாகை கலெக்டர் எச்சரிக்கை
தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:
தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தில் மீன்இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மற்றும் மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஆண்டுதோரும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி முடிய மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும்.
இதில் பைபர் படகை தவிர, விசைப்படகுகள் மற்றம் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை பின்வருமாறு:-
- மீன்பிடி விசைப்படகில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் விபரங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற பிறகே கடலுக்கு செல்ல வேண்டும்.
- மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது உயிர்காக்கும் கவச உடைகள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும்.
- மீன்பிடி படகள் இந்திய சர்வதேச எல்லைக்கோட்டினைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது. தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது.
- தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட வழிகாட்டு நெறிமுறைகள்படி தொழில் செய்ய வேண்டும்.
இவ்வாறு நாகை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.