கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்


கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்
x

கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொண்டு கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று கலெக்டர் சரயு கூறினார்.

கிருஷ்ணகிரி

சமுதாய வளைகாப்பு

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கலெக்டர் சரயு, மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றத்திற்காகவும், பெண்கல்வி ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கர்ப்பிணிகளின் நலம் காக்கவும், தாய்சேய் நலனை மேம்படுத்துவதற்கும் சமுதாய வளைகாப்பு எனும் சமுதாய விழிப்புணர்வு நிகழ்வினை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

நாளைய சமுதாயம்

இந்த நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து சீர் வரிசை பொருட்கள் வழங்கி 5 வகையான உணவுகள் மற்றும் லட்டு பரிமாறப்பட்டது. இன்றைய குழந்தைகள் தான் நாளைய சமுதாயம். ஒரு குழந்தையின் வளர்ச்சி அக்குழந்தையின் தாயின் கர்ப்பபையில் உருவானபோதே ஆரம்பமாகி விடுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமான, அறிவான, உற்பத்தித்திறன் நிறைந்த குழந்தையாக உருவாக அந்த கர்ப்பிணிக்கு கர்ப்பமான நாளிலிருந்தே சிறப்பு கவனம் அளிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் கடினமான வேலைகளை தவிர்க்க வேண்டும். பகலில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும். மன மகிழ்ச்சியுடன் இருப்பது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பெண் குழந்தைகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story