விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள்அரசின் திட்டங்களை பெற்று பயன் அடைய வேண்டும்
விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் அரசின் திட்டங்களை பெற்று பயன் அடைய வேண்டும் என்று கலெக்டர் சரயு அறிவுரை வழங்கினார்.
கால்நடை மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலிநாயனப்பள்ளி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கிளை மிட்டப்பள்ளியில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பால்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பால் உற்பத்தி கருத்தரங்கு நேற்று நடந்தது.
இதற்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் பூச்சி மருந்துகள் வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறந்த பால் உற்பத்தியாளர், கால்நடை வளர்ப்பவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் தாது உப்பு கலவையை கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
முகாமில் கலெக்டர் பேசியதாவது:-
உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு பாலின் தரத்தின் அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் அரசு நிர்ணயித்த விலை வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனம் போல் விலை கூட்டவோ, குறைப்பதோ இல்லை. பாலுக்கான தொகை வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தாமதமின்றி வழங்கப்படுகிறது. கலப்பு தீவனம், தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் கிலோ ரூ.21-க்கு வினியோகம் செய்யப்படுகிறது.
மாவட்ட மண் பரிசோதனைப்படி சிறப்பு தாது உப்பு கலவை குறைந்த விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என வழங்கப்பட்டு கால்நடையின் உடல் ஆரோக்கியம் மற்றும் பால் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. செயற்கை முறை கருவூட்டல், சினை பிடிக்காத மாடுகளுக்கு மலட்டு நீக்க சிகிச்சை முகாம், இஸ்ட்ரஸ்சின் கொரணேசேசன் சிறப்பு சிகிச்சை, மடி நோய் பாதுகாப்பு, தொற்று நோய்க்கான தடுப்பூசிகள் போடப்பட்டு கால்நடை நலனில் 100 சதவிகிதம் தனிக்கவனம் மேற்கொள்ளப்படுகிறது.
காப்பீடு தொகை
கால்நடைகளுக்கு 50 சதவீத மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி. உறுப்பினருக்கு 70 சதவிகித மானியத்தில் காப்பீடு செய்யப்படுகிறது. கறவை மாடு கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 7840 மாடுகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பேரறிஞர் அண்ணா நலநிதி திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் தொடர்ந்து பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் விபத்தில் ஒரு உறுப்பு இழப்புக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது.
இதேபோன்று விபத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பு இழப்புக்கு ரூ.1,75,000-ம், விபத்தில் உயிர்நீத்த உற்பத்தியாளர் குடும்பத்திற்கு ரூ.2,50,000-ம், இறந்தவரின் இறுதிசடங்கிற்கு ரூ.5 ஆயிரமும், குழந்தையின் திருமண செலவுக்கு ஒரு நபருக்கு ரூ.30,000-ம் மற்றும் அவரின் 2 குழந்தைகள் கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் என காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களும், அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் சுந்தரவடிவேலு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருள்ராஜ், பால்வள துணைப்பதிவாளர் கோபி, ஆவின் உதவி பொது மேலாளர் நாகராஜன், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் மகேந்திரன், பாலிநாயனப்பள்ளி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சரஸ்வதி சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடை டாக்டர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.