காந்தி சிலைக்கு கலெக்டர் மரியாதை


காந்தி சிலைக்கு கலெக்டர் மரியாதை
x
தினத்தந்தி 3 Oct 2023 12:30 AM IST (Updated: 3 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீலகிரி

ஊட்டியில் காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தி

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அருணா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்குள்ள கதர் அங்காடியில் காந்தி உருவப்படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்திார்.

பின்னர் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது கலெக்டர் அருணா பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்திற்கு 2023-2024-ம் ஆண்டிற்கு ரூ.2 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டிலும் மாநில அரசு மற்றும் கதர் கிராம தொழில்கள் ஆணை குழுவினரால் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் துணி, பட்டு துணி, பாலியஸ்டர் துணிக்கு தலா 30 சதவீதம், உல்லன் வகைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

கதர் துறை வளர்ச்சி

மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட பொருட்கள் அரசின் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று தொழில் முனைவோர் மற்றும் மகளிர் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் சிறந்த கைவினை பொருட்களும், கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஓவியர் ரவிவர்மா வரைந்த ஓவியங்கள், தத்ரூபமாக சிலை வடிவமாக உருவாக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் கைவினைஞர்களால் உருவாக்கப்படுவதால் அதனை வாங்குவதன் மூலம் ஏழை, எளிய கைவினைஞர்களின் வாழ்வாதாரம் உயர ஒரு வாய்ப்பாக அமையும். கதர் துறையின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்.டி.ஓ. மகராஜ், தாசில்தார் சரவணகுமார், நகர் நல அலுவலர் டாக்டர் ஸ்ரீதரன், நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க அமைதி குழு தலைவர் கிருஷ்ணன், செயலாளர் ஹாஜி முகமது அலி, பொருளாளர் மெக்கன்ஸி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story