பால் குளிரூட்டும் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


பால் குளிரூட்டும் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
சேலம்

வாழப்பாடி அருகே பால் குளிரூட்டும் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ரேஷன் கடையில் ஆய்வு

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்கு சேருவதை உறுதி செய்யும் வகையில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது, சந்திரபிள்ளை வலசை ரேஷன் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்தும், எடை எந்திரம் சரியாக இயங்குகிறதா? என்பது குறித்து கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் மற்றும் அதன் இருப்பு குறித்தும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் அங்கிருந்த ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டறிந்தார்.

விளையாட்டு மைதானம்

தொடர்ந்து சந்திரபிள்ளை வலசை அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகள் குறித்தும், குழந்தைகளின் வருகை பதிவேடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஊரக விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கூடைப்பந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் குறைந்தது 2 முதல் 7 விளையாட்டுகள் வரை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது அவர் ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் ஊரக விளையாட்டு அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பால் குளிரூட்டும் நிலையம்

இதையடுத்து சந்திரபிள்ளை வலசை பால் குளிரூட்டும் நிலையத்தில் கலெக்டர் கார்மேகம் திடீரென ஆய்வு செய்து கொள்முதல் செய்யப்படும் பால் கொள்ளளவு குறித்தும், பணியாளர்களின் விவரம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, கூட்டாத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, உயிர்காக்கும் மருந்துகள், விசமுறிவு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து பொருட்களை போதிய அளவில் இருப்பு வைத்திட அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ஆஸ்பத்திரிக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தினார்.


Next Story