செஞ்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டா் பழனி ஆய்வு
செஞ்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டா் பழனி ஆய்வு செய்தார்.
செஞ்சி,
செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒட்டம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 15-வது ஊராட்சி ஒன்றிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.82 ஆயிரம் மதிப்பில் சமையலறை கூடம் சீரமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.75 லட்சம் மதிப்பில் மாணவ-மாணவிகளுக்கான கழிவறை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பில் ஆசிரியர்களுக்கான கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டா் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரமாகவும், விரைந்து முடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து அணையேரி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் முள்ளூர் - புதூர் ஏரி மதகு சீரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும், அணையேரியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டா் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆரம்ப சுகாதார நிலையம்
முன்னதாக ஒட்டம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பழனி, அங்கு உள்நோயாளிகள் பிரிவு, யுனானி பிரிவு, பிரசவ கால கண்காணிப்பு பிரிவு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அணையேரி ரவி, ஒட்டம்பட்டு பிரேமா திருமலை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்லா, டாக்டர் விஜயகுமாரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.