ரேஷன் கடைகளில் மின்னணு பணப்பரிமாற்ற சேவை-கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்


ரேஷன் கடைகளில் மின்னணு பணப்பரிமாற்ற சேவை-கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
x

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மின்னணு பணப்பரிமாற்ற சேவையை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

மின்னணு பணப்பரிமாற்ற சேவை

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் மின்னணு பணப்பரிமாற்ற சேவை தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு மின்னணு பணப்பரிமாற்ற சேவையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள், மருந்தகங்கள், ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் அனைத்து விற்பனையகங்களிலும் மின்னணு பரிமாற்றம் மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணமற்ற பரிவர்த்தனையின் மூலம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் தங்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கியூஆர் கோடு குறியீட்டினை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி ரேஷன் பொருட்களை பெறக்கூடிய வகையில் தற்போது மின்னணு பரிமாற்றம் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள்

விழுப்புரம் மாவட்டத்தில் 1,255 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. மின்னணு பணப்பரிமாற்றம் சேவை முதல்கட்டமாக 128 ரேஷன் கடைகளில் தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரேஷன் கடைகளில் இத்திட்டம் 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, பொதுமேலாளர் ரவிச்சந்திரன், சார்பதிவாளர் சந்திரசேகரன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story