நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு கூடுதல் தொகை செலுத்த கலெக்டர் உத்தரவு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.
குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி புதுக்கோட்டை நகராட்சியில் நரிமேடு, பாலன் நகர் பகுதி-1, போஸ்நகர் ஆகிய திட்டப்பகுதிகள், இலுப்பூர் பேரூராட்சியில் எண்ணை மற்றும் இடையப்பட்டி திட்டப்பகுதிகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை நகராட்சியில் பாலன் நகர் பகுதி-2, சந்தைபேட்டை, ரெங்கம்மாள்சத்திரம் ஆகிய திட்டப்பகுதிகள், அறந்தாங்கி நகராட்சியில் அறந்தாங்கி திட்டப்பகுதி, கறம்பக்குடி, ஆலங்குடி, அரிமளம், அன்னவாசல் பகுதி-1 மற்றும் பகுதி-2, பொன்னமராவதி, கீரனூர் ஆகிய பேரூராட்சிகளில் திட்டப்பகுதிகள் கட்டப்பட்டு வருகிறது.
இதில் அறந்தாங்கி நகராட்சியில், 120 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட திட்டப்பகுதி கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. இத்திட்டப்பகுதியில் ஒரு குடியிருப்புக்கு மத்திய அரசின் மூலம் ரூ.1½ லட்சம், மாநில அரசின் மூலம் ரூ.7 லட்சம் மற்றும் பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.1 லட்சம் என தோராயமாக வசூலிக்கப்பட்டது.
பங்களிப்பு தொகை
மேலும் தற்போதைய அரசாணையின்படி, பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே ரூ.1 லட்சம் செலுத்திய பயனாளிகள் தற்போது மீதமுள்ள பங்களிப்பு தொகை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறந்தாங்கி திட்டப்பகுதி போலவே தற்போதைய அரசாணையின்படி, பயனாளியின் பங்களிப்பு தொகை போஸ்நகர், பாலன் நகர் பகுதி-2, சந்தைபேட்டை, கீரனூர் ஆகிய இடங்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், ஆலங்குடி ரூ.1¾ லட்சமும், பொன்னமராவதி ரூ.2 லட்சத்து 5 ஆயிரமும், கறம்பக்குடி ரூ.2 லட்சத்து 44 ஆயிரமும், அன்னவாசல் பகுதி-1 ரூ.2½ லட்சமும், அன்னவாசல் பகுதி-2 ரூ.2½ லட்சமும், அரிமளம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரமும், ரெங்கம்மாள்சத்திரம் ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே அறந்தாங்கி திட்டப்பகுதியிலுள்ள பயனாளிகள் வாரியம் நிர்ணயம் செய்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தில் கட்டிய முன்பணம் ரூ.1 லட்சம் போக மீதமுள்ள ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை முழுமையாக செலுத்த வேண்டும். முழு தொகையை செலுத்த இயலாத பயனாளிகளுக்கு அறந்தாங்கி திட்டப்பகுதி மற்றும் அந்தந்த திட்டப்பகுதியில் மாவட்ட முதன்மை வங்கியின் மூலம் வங்கி கடன் முகாம் நடத்தி வங்கி கடன் பெற ஆவன செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.