மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு
பாளையங்கோட்டையில் நடந்த மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற உள்ள மகளிர் உரிமைத் துறைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி முகாம்கள் நடந்து வருகிறது. பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நடந்த விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 1,877 ரேஷன் கார்டுகள் உள்ளது. கிராமப்புறங்களில் 528 ரேஷன் கடைகளில் கடந்த 20-ந் தேதி முதல் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 24-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 760 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து புறப்பட்டது. 2-ம் கட்ட பணி நேற்று தொடங்கியது. நகர்புறங்களில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 600 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த 1-ந் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 674 முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. மேலும் இதுதொடர்பாக 97865 66111 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.
ஆய்வின்போது பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.