மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் பிரதீப்குமார்
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் மேல்பத்து ஊராட்சியில் சுனைப்புக நல்லூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 56 ஆயிரத்தில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வகுப்பறைக்கு சென்று கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், பள்ளி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். கிளியநல்லூர் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும், ஓமாந்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 8 ஆயிரம் செலவில் பெரமங்கலம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் கலம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அழகிய மணவாளம் ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 83 ஆயிரம் செலவில் வரத்து வாய்க்காலிலும், கோவத்தக்குடி ஊராட்சி வீராந்த நல்லூரில் ரூ.9 லட்சத்து 69 ஆயிரம் செலவில் வீராந்தநல்லூர் சரசவள்ளி வாய்க்காலிலும் அமைக்கப்பட்டு வரும் நீர் உறிஞ்சி குழிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.