அத்திப்பட்டு ஊராட்சியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு


அத்திப்பட்டு ஊராட்சியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
x

அத்திப்பட்டு ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர்

வெள்ள பாதிப்பு

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி கொசஸ்தலை ஆற்றின் தாழ்வான வடிநில பகுதியாக விளங்குகிறது. வடகிழக்கு பருவ மழையின் போது வெள்ளத்தில் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பெருத்த சேதத்தை விளைவிக்கும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

மேலும் பல இடங்களில் அரசு நிலங்கள் கால்வாய் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அத்திப்பட்டு ஊராட்சி எப்போதும் மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது. எனவே ஊராட்சி மன்றத்தின் சார்பில் ராட்சத பம்பு செட்டுகள் கொண்டு மழை நீரை வெளியேற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் இடைவிடாமல் 2 நாட்கள் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆய்வு

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பருவம் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஆய்வு செய்வதற்காக அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக்கு நேரில் வந்து மழை வெள்ள பாதிப்புகள் குறித்து சப் கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி உள்பட பல்வேறு துறை அதிகாரியுடன் கலந்தாய்வு செய்தார்.

பின்னர் காமராஜர் துறைமுகம் பகுதியில் அடைப்பு பகுதியை தூர்வாரவும், பி.பி.சி.எல்., எஸ்.பி.சி.எல். ஆகிய நிறுவனங்களுக்கு செல்லும் சாலையில் புதிதாக பாலம் அமைக்கவும், கால்வாய்களை தூர்வாரவும், மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறையினருக்கு உத்தரவிட்டார்.


Next Story