நல்லூர் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
நல்லூர் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்தார்.
தொடர்ந்து அவர் ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேவூர்- அகரம் சாலை ரூ.93 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 1.27 கி.மீ. சாலை பணிகள் நடைபெறுவதையும், பூலாம்பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 51 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 3.17 கி.மீ. நீளத்திற்கு கலியமேடு - வரம்பனூர் சாலை பணிகள் நடைபெறுவதையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் காளிமாமேடு நடுஏரி ஒடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆய்வு
அதன்பிறகு ஐவதுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும் நகர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிகாமணி, ஜெயகுமார், உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.