தென்காசியில் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு


தென்காசியில் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

தென்காசி

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. தென்காசி ஐ.சி.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த ஆய்வு நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அவருடன் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர், மாவட்ட கல்வி அலுவலர் ராமசுப்பு, மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் பிரதீப் குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி ஆகியோரும் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் படிக்கட்டு, அவசர வழி, சி.சி.டி.வி. கேமரா, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வி ஆண்டை தொடங்குவதற்கு முன்பு பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வது வழக்கமான ஒரு நிகழ்வாகும். வட்டார போக்குவரத்து அலுவலகம், கல்வித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை ஆகிய துறைகளுடன் இணைந்து இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 450 பள்ளி வாகனங்கள் உள்ளன. அவற்றில் இன்று (அதாவது நேற்று) 156 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பள்ளி வாகனங்களை கவனமுடன் இயக்க ஓட்டுனர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. வாகனத்தின் முன்புறமும் மற்றும் பின்புறமும் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு ஓட்டுநர் வாகனத்தை இயக்க வேண்டும். அனைத்து ஆய்வுகளும் முடிவடைந்த பிறகு இந்த வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படும். அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story