குமராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
குமராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
விடுதி பழுது நீக்கம்
குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக கலெக்டர் அருண்தம்புராஜ் வந்தார். இதையடுத்து அவர் ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.1 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் விடுதி புனரமைப்பு பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சிதம்பரம், நான்முனிசிபல் ஊராட்சியில் அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா மணிமண்டப வளாகத்தில் உள்ள நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் மற்றும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சமையல் கூடம்
உசுப்பூர் ஊராட்சி சக்திநகர் பகுதியில் உள்ள புளிச்சமேடு குளத்தை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும், கடவாச்சேரி ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் 2 புதிய வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், அதன் அருகே ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் புதிதாக கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு வல்லம்படுகை ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் வேளக்குடி - ஜெயங்கொண்டபட்டினம் வரை தார் சாலை மற்றும் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் வேளக்குடி - அகரநல்லூர் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அதன் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
சிமெண்டு சாலை
அதைத்தொடர்ந்து, தெற்குமாங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும், அத்திப்பட்டு ஊராட்சியில் 15-வது மானிய நிதிக் குழு மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், அத்திப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, செயற்பொறியாளர் தணிகாசலம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.