திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் வாகன நிறுத்தத்துடன் 52 கடைகள் கட்டும் பணி; கலெக்டர் பூங்கொடி ஆய்வு


திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் வாகன நிறுத்தத்துடன் 52 கடைகள் கட்டும் பணி;  கலெக்டர் பூங்கொடி ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2023 3:30 AM IST (Updated: 14 Oct 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் வாகன நிறுத்தத்துடன் 52 கடைகள் கட்டும் பணியை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் வாகன நிறுத்தத்துடன் 52 கடைகள் கட்டும் பணியை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சி மூலதன மானிய நிதி மூலம் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் சந்தைப்பேட்டை பகுதியில் ரூ.5 கோடியில் இரும்பு பொருட்கள் விற்பனை சந்தைக்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இதே பகுதியில் ரூ.10 கோடியில் வாரச்சந்தை கட்டிடம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பூங்கொடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இரும்பு சந்தையின் அமைப்பு, பணிகளின் நிலவரம், கட்டுமானத்தின் தரம் ஆகியவை குறித்தும், வாரச்சந்தை கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வரும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றின் கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அதே பகுதியில் ரூ.2½ கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி பொறியாளர் தியாகராஜன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். பின்னர் இதுகுறித்து நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது:-

52 கடைகள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் இரும்பு சந்தையில் 2 ஏ.டி.எம். எந்திர மையங்கள், வாகன நிறுத்தங்களுடன் 52 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. அதேபோல் வாரச்சந்தையும் 64 கடைகளுடன் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் வரை அனைவரும் பலன் அடையும் வகையில் அறிவுசார் மையமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 50 சதவீதம் அரசு நிதி, 50 சதவீதம் முன் ஏலம் மூலம் பெறப்பட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாடகைதாரர் நிதி என்ற வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Next Story