சங்ககிரி அருகேகல்குவாரியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு
சங்ககிரி அருகே கல்குவாரியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
சங்ககிரி
சங்ககிரி அருகே கல்குவாரியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
கோவில் நிலம்
சங்ககிரி அருகே வீராட்சிபாளையம் கிராமத்தில் தண்ணீர் ஊத்து பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு கோவில் பராமரிப்புக்காக அறங்காவலர் குழுவிற்கு நிலம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நிலத்தை 20 ஆண்டுகளுக்கு சுண்ணாம்பு கல் வெட்டி எடுக்க தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தனியார் கல்குவாரி உரிமையாளர்கள் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. ஆனால் தொடர்ந்து தனியார் நிறுவன உரிமையாளர்கள் மீண்டும் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனியார் நிறுவனம் கல் எடுக்காமல் நிறுத்திவிட்டனர். ஆனால் கல்குவாரி குழிகளை மூடி கொடுக்கவில்லை. இதனால் கல்குவாரியில் தண்ணீர் தேங்கி நின்றது.
கலெக்டர் ஆய்வு
இந்த நீர்தேக்கத்தில் இளைஞர்கள் மீன்பிடிக்கவும், நீச்சல் பழகவும் செல்லும்போது எதிர்பாராதவிதமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த தனியார் கல்குவாரி உரிமையாளர்கள் கல்குவாரி குழிகளை மூட வலியுறுத்தியும் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அந்த பகுதி பொதுமக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று கோவில் நிலம் மற்றும் கல்குவாரியை ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோவில் நிலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்று அளவீடு செய்து கலெக்டர் ஆய்வு செய்தார். அவருடன் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.