பேறுகால இறப்பு இல்லாதமாவட்டமாக உருவாக்க வேண்டும்கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் பேறுகால இறப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் பேறுகால இறப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் பரிசோதனைகள், சிகிச்சைகள் குறித்து டாக்டர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் 13 அரசு மருத்துவமனைகள், 502 துணை சுகாதார மையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பருவமழை காலம் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக கவனத்துடன் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்.
குறிப்பாக எடை குறைவான கர்ப்பிணி பெண்கள், இதய நோய், வலிப்பு, ஆஸ்துமா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனைக்கு வரும் போது அவர்களுக்கு டாக்டர்கள், நர்சுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
உருவாக்க வேண்டும்
அதன்படி மகப்பேறு இறப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு டாக்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 52 சதவீத பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு, நலமுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 48 சதவீத பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணி, கண்காணிப்பாளர் தனபால், நலப்பணிகள் இணை இயக்குனர் பானுமதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.