விழுப்புரத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்
இன்று சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்
சுதந்திர தின விழா
நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு, காலை 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர் சுதந்திர போராட்ட தியாகிகள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை கவுரவிக்கிறார். பின்னர் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்குகிறார். அதன் பிறகு பள்ளி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்பு
விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் விழா நடைபெறும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்திலும் மோப்ப நாய் ராக்கி உதவியுடன் போலீசார், தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள முக்கிய சாலைகள், மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் மாவட்டத்தில் உள்ள பஸ், ரெயில் நிலையங்களிலும் போலீசார், மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு பிரிவு போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ்காரர்கள் கிருஷ்ணராஜ், சாதிக் பாஷா ஆகியோர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.
திண்டிவனம்
திண்டிவனம் ரெயில் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷன் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் இருந்து வருகிறார்கள். ரெயில் நிலையத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்