காஞ்சீபுரத்தில் மாணவ-மாணவிகளுடன் காலை உணவு சாப்பிட்ட கலெக்டர்
காஞ்சீபுரத்தில் மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் கலைச்செல்வி மோகன் காலை உணவு சாப்பிட்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாநகராட்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சிற்றுண்டிகள் 37 பள்ளிகளில் 3 ஆயிரத்து 579 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.
திங்கட்கிழமை ரவா உப்புமா, சாம்பாரும், செவ்வாய்க்கிழமை சோள காய்கறி கிச்சடியும், புதன்கிழமை வெண்பொங்கல் சாம்பாரும், வியாழக்கிழமை அரிசி உப்புமா, சாம்பாரும், வெள்ளிக்கிழமை கோதுமை ரவா கிச்சடி அல்லது ரவா கேசரியும் என ஒவ்வொரு பள்ளி நாட்களிலும் சுழற்சி முறையில் வெவ்வேறு வகையான சிற்றுண்டி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதன் தொடர் நிகழ்வாக தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் உடன் இருந்தனர்.