பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை - கலெக்டர் வழங்கினார்
பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் அரசு உயர்நிலை பள்ளியில் நேற்று தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி, தான் முதலில் குடற்புழு நீக்க மாத்திரையை சாப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் அவர் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார்.
அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-
தேசிய குடற்புழு நீக்க நாளான செப்டம்பர் மாதம் 9-ந்தேதி தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடாகும்.
30 வயதுக்கு கீழ் இருக்கக்கூடிய பெண்களுக்கும், 19 வயதிற்கு கீழ் இருக்கக்கூடிய அனைத்து ஆண்களுக்கும் ஒரே நாளில் இந்த குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 6 ஆயிரத்து 624 குழந்தைகளுக்கும், 2 லட்சத்து 46 ஆயிரத்து 977 பெண்களுக்கும், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,428 பள்ளிகளிலும், 456 தனியார் பள்ளிகளிலும், 68 கல்லூரிகளிலும், 1,756 அங்கன்வாடி மையங்களிலும் என மொத்தம் 3 ஆயிரத்து 708 மையங்களில், உள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதாரபணியாளர்கள் என 4 ஆயிரத்து 322 பணியாளர்கள் மூலமாக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 16-ந்தேதி அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட உள்ளது. எனவே அனைவரும் இந்த குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு குடற்புழு தொற்றால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கம், பொற்செல்வி, திருப்பாச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபன்பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
============