அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
அரசு பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் அனைத்து வகையான போட்டித்தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் வார இறுதி நாட்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்திலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில், பெரம்பலூர் ஒன்றியத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனை 138 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ-மாணவிகளிடம் கலெக்டர் கற்பகம் கூறியதாவது:-
நான் அரசுப்பள்ளியில் தான் படித்தேன். முதுகலை உயிரியல் படித்துள்ளேன். உங்களுக்கு உயிரியில் பாடப்பிரிவிற்கான வகுப்புகளை விரைவில் நானே வந்து எடுக்கிறேன். படிப்பில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். விரைவில் நடைபெற இருக்கும் 'நீட'் தேர்வில் எளிதில் எதிர்கொண்டு அனைவரும் மருத்துவர்களாக வர வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன். கல்விக்காக உங்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.