ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவிகளுக்கு கலெக்டர் ஆறுதல்
சீர்காழி அருகே வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பள்ளி மாணவிகளை கலெக்டர் லலிதா சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
சீர்காழி:
சீர்காழி அருகே வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பள்ளி மாணவிகளை கலெக்டர் லலிதா சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆஸ்பத்திரியில் மாணவிகள் அனுமதி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புளிச்சக்காடு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு நேற்று முன்தினம் திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தநிலையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று வாந்தி-மயக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவிகளை பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது, மாணவிகளின் பெற்றோர்களிடம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு தலைமை டாக்டர் பானுமதியிடம், மாணவிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பின்னர், நிருபர்களிடம் கலெக்டர் கூறுகையில், பள்ளி குழந்தைகளுக்கு குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கொள்ளிடம் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இதுதொடர்பாக வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அப்போது உதவி கலெக்டர் அர்ச்சனா, சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் நாகராஜன், பூங்குழலி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.