கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்
ராணிப்பேட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 237 பயனாளிகளுக்கு, ரூ.70 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராணிப்பேட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 237 பயனாளிகளுக்கு, ரூ.70 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலெக்டர் கொடியேற்றினார்
ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் நிலைப்பள்ளி மைதானத்தில், 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றிக் கொண்டார்.
பின்னர் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், டாக்டர்கள், போலீசார் பணியாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 660 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நலத்திட்ட உதவி
இதனைத் தொடர்ந்து வேளாண்மை பொறியியல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 237 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 92 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
முன்னதாக ராணிப்பேட்டை எல்.எப்.சி பள்ளி, வி.ஆர்.வி. பள்ளி, கங்காதரா பள்ளி, ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜி.வி.சி. பள்ளி, பெல் ராமகிருஷ்ணா பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, உதவி கலெக்டர்கள் பூங்கொடி, பாத்திமா, துணை கலெக்டர்கள் சத்யபிரசாத், மணிமேகலை, தாரகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், தாசில்தார்கள் பாபு, விஜயகுமார், ஆனந்தன், துணை போலீஸ் சூப்பிண்டு பிரபு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகள் சுதந்திர தின விழாவிற்கு அழைத்து கவுரவிப்பது தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து ஆற்காடு நகராட்சி தொல்காப்பியர் தெருவில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் வீட்டிற்கு சமூக பாதுகாப்பு துணை கலெக்டரும் மற்றும் ஆற்காடு தாசில்தாரும் நேரில் சென்று சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.