புகையிலை பொருட்கள் விற்றால் கடைகளுக்கு 'சீல்' கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை
புகையிலை பொருட்கள் விற்றால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் புற்று நோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்து புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்த கடைகளை உடனடியாக சீல் வைத்து, வர்த்தகம் நிறுத்தப்பட வேண்டும்.
பழங்கள்
உணவகங்களில் அதிகப்படியான செயற்கை நிறமிகள் கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாம்பழம், அன்னாச்சி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ (எத்திப்பான், எத்திலின்) பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோரின் கடையை சீல் வைத்து, 3 மாத காலம் வரை வர்த்தகத்தை நிறுத்தி வைக்கவும், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.