ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி - கலெக்டர் லலிதா
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் லலிதா கூறினார்.
மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக பெற்றோரை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு 'மிஷன் வாட்சாலயா' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு கிராம பகுதிக்கு ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாகவும், நகரப்பகுதிக்கு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.96 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே நிதி ஆதரவு திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வருமானச்சான்று பெற்று, அதனுடன் குழந்தையின் கல்விச்சான்று, வங்கி கணக்கு எண், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பெற்றோரின் இறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்கள், குழந்தையின் புகைப்படத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36-2 திருமஞ்சன வீதி, திருவிழந்தூர், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.