குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்-கலெக்டர் அறிவுரை


குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்-கலெக்டர் அறிவுரை
x

குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை கூறினார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் தாலுகா உள் வீரராக்கியம் கிராமத்தில் உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி தாய்ப்பால் குறித்து கர்ப்பிணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பதிலோ அல்லது தாய்ப்பால் சுரப்பதிலோ ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதின் காரணமாக குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை எக்காரணத்தை கொண்டும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. முதியவர்கள் தயவு கூர்ந்து இந்த கருத்துக்களை உங்கள் வீட்டில் உள்ள இளம் தாய்மார்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கிட முடியும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக கர்ப்பிணிகளுக்கு பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறை மற்றும் விளையாட்டு மூலம் கற்றல் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் தாய்ப்பால் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டு, அதுகுறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளதா? என்பதை ஆய்வு மேற்கொண்டு எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்க ஆலோசனைகளை வழங்கினார்.


Next Story