நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்
செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர், கிராம ஊராட்சிகளுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு ஊராட்சியிலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கிராமங்களை வலுப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3 கோரிக்கைகள்
தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். கிராமங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே, ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களிடமும் அவர்களது ஊராட்சியில் உள்ள முக்கியமான 3 கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. அந்த 3 கோரிக்கைகளில் எது முக்கியமானது என்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கலெக்டர் மகாபாரதி கலந்தாய்வு நடத்தினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள், தங்களது ஊராட்சியில் முதன்மையாக செயல்படுத்த வேண்டிய கோரிக்கையை தெரிவித்தனர். அந்த கோரிக்கைக்கு கலெக்டர் முன்னுரிமை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கண்காணிப்பு கேமரா
மேலும் குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும், தடுக்கவும் ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் மஞ்சுளா, கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.