பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை விசாரிக்க தாமதம் செய்யக்கூடாது; அதிகாரிகளுக்கு, கலெக்டர் ஷஜீவனா அறிவுரை
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை விசாரிக்க தாமதம் செய்யக்கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா அறிவுரை வழங்கினார்.
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை விசாரிக்க தாமதம் செய்யக்கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா அறிவுரை வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். புதிய கலெக்டராக ஷஜீவனா பொறுப்பு ஏற்றபிறகு பங்கேற்ற முதல் குறைதீர்க்கும் கூட்டம் இதுவாகும்.
இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் பேசும்போது, "பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது விசாரிக்க எந்த காலதாமதமும் செய்யக்கூடாது. தாமதமின்றி விசாரணையை மேற்கொண்டு, தகுதிவாய்ந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் தகுதியான அனைத்து மக்களுக்கும் நேரடியாக கிடைக்கும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.
பின்னர் 21 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு
இந்த கூட்டத்தில் இந்து முன்னணி தேனி ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், வீரபாண்டி முல்லைப்பெரியாறு படித்துறை, கண்ணீஸ்வரமுடையார் கோவில் போன்ற பகுதிகள் சுகாதாரக்கேடாக காட்சி அளிப்பதால் தூய்மை பணிகள் மேற்கொள்ளவும், போதிய அளவில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜதுரை தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை 4 மாதத்துக்குள் அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
தமிழ்நாடு அமைப்புசாரா தெருவோர சிறுவியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்க மாநில தலைவர் ராசாமுருகேசன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலையோர வியாபாரத்தை நம்பி வாழ்ந்து வரும் நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பில் குறைவான எண்ணிக்கையில் தள்ளுவண்டிகள் வழங்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் தள்ளுவண்டிகளை வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
குழந்தைகளுடன் பெண் மனு
நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த அஜித் மனைவி வீரம்மா என்பவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வந்து, கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "நானும், எனது கணவரும் காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்டோம். எனது கணவர் காமயகவுண்டன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக மின்உதவியாளராக பணியாற்றி வந்தார். 2½ வயதில் ஒரு மகளும், 6 மாத கர்ப்பமாகவும் நான் இருந்த போது, எனது கணவர் டிரான்ஸ்பார்மில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில் எனக்கு 2-வதும் பெண் குழந்தை பிறந்தது. தற்போது எந்த ஆதரவுமின்றி கஷ்டப்படுகிறேன். எனக்கு சத்துணவு அமைப்பாளர் பணியை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.