தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இரும்பு வேலி அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு


தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இரும்பு வேலி அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 April 2023 12:30 AM IST (Updated: 13 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இரும்பு கம்பிவேலி அமைக்கும் பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இரும்பு வேலி

தேன்கனிக்கோட்டை வனச்சரகம் குள்ளட்டி காப்புகாடு எல்லையில் மேலூர் முதல் ஓம்மாண்டணப்பள்ளி வரை மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மூலம் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் 5 கி.மீட்டர் தூரத்திற்கு இரும்பு கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- யானைக்கூட்டங்கள் ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை உண்டும் சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களுக்கு வனப்பணியாளர்கள் உடனுக்குடன் தணிக்கை செய்து அதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தடுப்புச்சுவர்

ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளின் எல்லையோரம் 300 கி.மீ துரத்திற்கு யானை தண்டா அகழிகள் வெட்டப்பட்டும், சூரிய மின்வேலி அமைத்தும் யானைகளுக்கு தேவையான நீர் ஆதாரங்கள், வனப்பகுதியில் யானைகள் மற்றும் இதர வன உயிரினங்கள் விரும்பி உண்ணும் தீவன பயிர்கள் வனப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளிலிருந்து பயன்படுத்தப்படாத உபயோகமற்ற கிரானைட் கற்களை கொண்டு முக்கிய இடங்களில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு யானைகள் காப்புக்காட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யானைகளை காப்புக்காடுகளில் நிலை நிறுத்தும் பொருட்டு காவிரி வடக்கு வனஉயிரின சரணாலயத்தின் காப்புக்காடுகளின் எல்லையோரம் இரும்பு கம்பி தடுப்பு வேலி ஓசூர் வனக்கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. காவேரி வடக்கு வன உயிரின சரணாலயத்தின் வடக்கு எல்லையில் சுமார் 140 கி.மீ. தொலைவிற்கு வேலி அமைக்கப்பட உள்ளது. யானைகள் காப்புக்காடுகளில் இருந்து வெளியேறும் முக்கிய இடங்களை கண்டறிந்து 2019-2020-ம் ஆண்டில் இருந்து 40 கி.மீ. நீளத்திற்கு இரும்பு கம்பி வட தடுப்பு வேலி அமைக்கப்பட்டு யானைகள் காப்புக் காட்டினை விட்டு வெளியேறி சேதங்கள் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நாற்றங்கால் பண்ணை

இதனை தொடர்ந்து அவர் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் மேலூர் மத்திய நாற்றங்கால் பண்ணையில் மலைவேம்பு, சில்வர் ஓக், தேக்கு, ஜெம்புநாவல், வேம்பு, புளியன், நெல்லி, மூங்கில் உள்ளிட்ட 23 வகையான மரக்கன்றுகள் நடும் பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது ஓசூர் வனக்கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரகர்கள் முருகேசன், சீத்தராமன், வெங்கடாசலம், சுகுமார், பார்த்தசாரதி, தாசில்தார் சரவணமூர்த்தி, துணை தாசில்தார் மதன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story