அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
மாதாந்திர கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு மாதாந்திர கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார். கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளால் இயக்கப்படும் வாகனங்கள் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி இயக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளக்ஸ் பேனர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். நகர பகுதிகளில் சாலை ஓரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைப்பதை தடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளி, மருத்துவமனைகள் முகப்பு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதை தடுக்க வேண்டும்.
சாலையோரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளுக்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 4 வழிச்சாலையினை உபயோகிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தேவையான இடங்களில் அறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும்.
சுமூக தீர்வு
சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, கவுசல்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், நகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார்கள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.