தர்மபுரி மாவட்டத்தில் 1,485 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 1,485 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி பல்வேறு வாக்குச்சாவடிகளில் நடந்த முகாம்களை நேரில் ஆய்வு செய்தார்.
சிறப்பு முகாம்கள்
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 01.01.2023 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த ஆணையிட்டது.
அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் 878 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகளிலும் நேற்று வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களில் தகுதியான நபர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்
ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றம் செய்ய விரும்பியவர்கள் அதற்கான படிவம் 8-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். மேலும் ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 1485 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்களுக்கு அதற்கான விண்ணப்பங்களை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.