தர்மபுரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி251 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்பாலஜங்கமனஅள்ளியில் கலெக்டர் சாந்தி பங்கேற்பு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பாலஜங்கமனஅள்ளியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பங்கேற்றார்.
கிராமசபை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்திையயொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகத்தின் பொது செலவினங்கள், வரவு செலவு விவரங்கள், மேற்கொள்ளப்பட்டுள்ள திட்ட பணிகளின் விவரம் குறித்த அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பாலஜங்கமனஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
சுயஉதவி குழு பணிக்கூடம்
தொடர்ந்து பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் சாந்தி பேசுகையில், மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இருப்பிடங்களை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தேங்குகிற நீரினால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்து கொள்வதோடு, நீர் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மழைக்காலங்களில் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன் கொட்டாயில் ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுயஉதவி குழு பணிக்கூடத்தை கலெக்டர் சாந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி துணை தலைவர் கோவிந்தராஜ், தாசில்தார் ஆறுமுகம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.