நாமக்கல்லுக்குஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் 2023 கோப்பை வந்ததுபொதுமக்களுக்கு கலெக்டர் உமா அறிமுகப்படுத்தினார்
நாமக்கல்லுக்கு வந்த ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் 2023 கோப்பையை கலெக்டர் உமா மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
கோப்பை சுற்றுப்பயணம்
சென்னையில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற உள்ள `ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் 2023' போட்டியை சிறப்பாக நடத்த ஏதுவாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் சீனா, பாகிஸ்தான், மலேசியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இதற்கிடையே ஆசிய ஆக்கி போட்டிக்கான கோப்பையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் கடந்த 22-ந் தேதி கன்னியாகுமரியில் `பாஸ் தி பால்' என்ற கோப்பை சுற்றுப்பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஆசிய கோப்பை கொண்டு செல்லப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
நாமக்கல் வந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் 2023 கோப்பையானது நாமக்கல் வந்தது. பின்னர் நாமக்கல் குளக்கரையில் கோப்பையை ராமலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் உமா பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் பொம்மன் இலச்சினையை அவர் வெளியிட்டார்.
இதையடுத்து நாமக்கல்லில் இருந்து சேலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்காக கோப்பை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கோகிலா, நாமக்கல் மாவட்ட ஆக்கி யூனிட் தலைவர் நடராஜன், செயலாளர் ஜான் ஸ்டீபன், துணைத்தலைவர் சந்தான ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.